ஜோதிடம்

பாவக் கிரகங்களின் சூட்சும வலு....!

இயற்கை பாவக் கிரகங்களில் முதன்மையானவர்களாகக் கருதப்படும் சனியும் செவ்வாயும் எந்த ஒரு ஜாதகத்திலும் நேரடியாக உச்சம் ஆட்சி போன்ற நிலைகளில் வலுவடைவது அதிர்ஷ்டத்தைத் தருவது இல்லை .

கிரகங்களின் ஷட்பலத்தில் முதன்மை பலமான ஸ்தானபலத்தை பாவக்கிரகங்கள் கேந்திர கோணங்களில் அடையவே கூடாது .அதாவது பாவ கிரகங்களான சனியும் செவ்வாயும் நேரிடையாக வலுப்பெறக் கூடாது .லக்னாதிபதியாகவே இந்த இரு கிரகங்கள் அமைந்தாலும் அவை ஸ்தானபலம் பெற்று நேரிடையாக வலுப்பெறுவது நல்லது அல்ல.

அதைவிட சனியும் ,செவ்வாயும் ஒரு ஜாதகத்தில் ஸ்தானபலம் இழந்து (அதாவது ஆட்சி உச்சம் பெறாமல் ) திக்பலமோ ,சுபர்களின் பார்வை பலமோ பெறுவது, மறைவிடங்களில் ஸ்தானபலம் பெறுவது மிகச்சிறந்த யோகத்தையும், ஜாதகருக்கு நல்ல குணங்களையும் தரும் .

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலான எனது ஜோதிட ஆய்வில் நான் கண்டுணர்ந்த இதையே "பாவக் கிரகங்களின் சூட்சும வலு தியரி " என நான் குறிப்பிடுகிறேன்.

பொதுவாக சனியும்,செவ்வாயும், குனக்கேடுகளுக்கு காரணமானவர்கள். தனித்து வலிமை பெற்ற செவ்வாயால் ஒரு கடுமையான முரட்டுத்தனமான முன்கோபக்காரனையும்,சனியால் முட்டாள்தனமான பிடிவாதக் காரனையும் மட்டுமே உருவாக்க முடியும்.

கிரகங்கள் பாவ கிரகங்கள்,சுப கிரகங்கள்என்று நமது ஞானிகளால் ஏன் பிரிக்கப்பட்டன ?

மனித வாழ்விற்குத் தேவையான, மனிதனை நல்லவழியில் செல்ல வைக்கக் கூடிய செயல்பாடுகளைத் (காரகத்துவங்கள் )தரும் கிரகங்கள் சுப கிரகங்கள் எனவும்.

தேவையற்ற குணங்களையும் ,பிறருக்கு துன்பம் தரும் செயல்களையும் ,அடுத்தவரோடு ஒத்துபோகாத, தீயவழிகளையும் தரும் கிரகங்கள் பாவக் கிரகங்கள் என்றும் வகுக்கப்பட்டன.